ஓநாய் குலச்சின்னம் ~ஜியாங் ரோங் தமிழில்~ சி.மோகன்

வரலாறு நெடுகிலும் வளர்ச்சிக்கும் அடையாளத்திற்குமான போட்டியில் அடையாளம் சமரசத்திற்குள்ளாகிறது. இது வளர்ச்சியே அடையாளம் என்ற கருத்தாக்கத்தின் விளைவு ஆகும். வளர்ச்சியின் பாதையில் விட்டுச் செல்லப்படுகின்ற எச்சங்கள் கூட அடையாள பேதங்களை இழந்து, வெவ்வேறு பிண்ணனியிலான ஒரே கதைகளாகவே இருக்கின்றன. அதில் வீழ்ந்துவிட்ட மரங்கள் மட்டுமே இருக்கிறதன்றி துண்டிக்கப்பட்ட வேர்கள் இல்லை. வெகு அரிதாக அவ்வப்போது அந்த வேர்களை நோக்கிய வெளிச்சங்கள் நீள்கின்றன. வளர்ச்சியின் பயணத்தில் நாம் எதை, எங்கே, எப்படி இழந்தோம் என்பதை அடையாளம் காண்பதும் காண்பிப்பதும் அவசியம். ஏனெனில் இழந்ததை கொண்டே நாம் பெற்றதை மதிப்பிட முடியும்; அதன் உன்னதத்தை தீர்மானிக்க முடியும். வரலாற்றின் ஒவ்வொரு குறுகிய பயணமும் சில தலைமுறைகளை எளிதாக கடந்து விடுகிற போது இலக்கியங்கள் மட்டுமே இத்தகைய மதிப்பீடுகளை சாத்தியப்படுத்த முடியும். அந்த வகையில் நவீன சீனாவின் வளர்ச்சியை, அதன் தன்மையை மதிப்பீடு செய்வதற்கு இந்த நூல் உதவுகிறது. சீனாவின் வளர்ச்சி எதன் மேல் கட்டிஎழுப்பப்பட்டது என்பதை உள்மங்கோலிய நாடோடி சமூகத்தின் வரலாற்றின் போக்கின் மூலம் பேசுகிறது. 


“மனிதனே பிரதானம்” என்ற கோட்பாடு, எல்லைகளை கடந்து காலகாலமாக அனைத்து நாகரிக, சமூக மாற்றங்களுக்கும் முன்னேற்றங்களுக்குமான பிரதான காரணியாக இருக்கிறது. இந்த கோட்பாட்டின் பிண்ணனியில், மனிதனின் பரிணாம வளர்ச்சியில் தொடங்கி இன்று வரை உலக இயக்கத்தின் போக்கு அனைத்து தளங்களிலும் பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளாகி இருக்கிறது- சூழலியல் ரீதியாக, பூகோள ரீதியாக, உயிரியல் ரீதியாக, எனப் பல வடிவங்களிலும். அத்தகைய கோட்பாட்டை ஒரு அரசாங்க இயக்கத்தின் ஆதாரமாக கொண்டு, பிரச்சாரம் செய்து, ஒரு சமூகத்தின் மீது திணிக்கும் போது, மேற்சொன்ன அனைத்து தளங்களிலும் அந்த சமூகம் எதிர்கொள்ளும் மாற்றங்களை மிக அணுக்கமாக அவதானித்து தன் அனுபவங்களின் வாயிலாக ஆசிரியர் பதிவு செய்துள்ளார். மாவோவின் சீனாவில் இருந்து இந்த சித்தாந்தை 
உள்மங்கோலிய நாடோடிகள் சமூகத்தில் விதைக்க சுமந்து செல்லும் மாணவர்களின் அனுபவங்கள், அவர்களின் குறிக்கோளிற்கு நேர்மாறாக அமைகிறது. உண்மையும், எதார்த்தமும், இயற்கையும் இயல்பாக தங்களுக்குள் கொண்டிருக்கும் ஈர்ப்புசக்தியால் மாணவர்களை தன்வசப்படுத்தி, அவர்களது குறிக்கோளை மட்டுப்படுத்தி விடுகின்றன. உள்மங்கோலிய மேய்ச்சல் நிலப்பரப்பில் அந்த ஈர்ப்புவிசையின் மையப்புள்ளியாக  ஓநாய்கள் அமைந்துவிட்டதில் ஆச்சர்யத்திற்கு இடமில்லை. அந்த நிலப்பரப்பில் இயற்கைக்கும் மனிதர்களுக்குமான கண்ணியாக இருந்த, வாழ்க்கைமுறையும் கலாச்சாரமும் நம்பிக்கைகளும் பழமைவாதம் என முத்திரை  குத்தப்பட்டு வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றது. அந்த வன்முறையின் தீவிரங்களும் ரணங்களும் நாடோடி இன மூத்த மேய்ப்பர் பில்ஜியின் ஒவ்வொரு எதிர்வினையின் மூலம் பதிவு செய்யப்படுகிறது. 


அறிவியலும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கும் வெளியில் அமைந்துள்ள ஒரு வாழ்க்கை, அது இயற்கையோடு இயைந்ததாக இருந்தாலும் பழமைவாதம் என முத்திரை குத்தப்படுவதும், அத்தகைய வாழ்க்கை முறை மீது பலவந்தமாக நாகரிகம்/வளர்ச்சி என்ற பெயரில் கலாச்சார திணிப்பை மேற்கொள்வதும் “இயற்கையே அறிவியல்” என்ற அடிப்படை கூறின் புரிதலை இழந்த நாகரிக சமூகத்தில் இயல்பாகி வருகிறது. அறிவியல் என்பது இயற்கையின் உண்மைத் தன்மையை அறிதல் என்ற உண்மையில் இருந்து விலகி வாழ்க்கைத்தரம் சார்ந்ததாகிப் போனதன் விளைவே இது. அத்தகைய அடையாள அழிப்பு என்ற கலாச்சார வன்முறை, உலகின் மிக வலுவான, முக்கியமான பொதுவுடமைச் சமூகத்திலும் கூட இயல்பாக பொதுக் காரணிகளின் அடிப்படையிலும் வளர்ச்சியின் பெயராலும் நிகழ்த்தப்படுவது  முரண். 


இந்த வன்முறையின் இரு பக்கங்களும் ஏக காலத்தில் வெளிப்படுகிறது. ஒரு புறம் டோர்ஜியும் பாவோ சுங்காயும் தங்கள் அடையாளங்களை இழந்து வேறொரு அடையாளத்திற்காக, அதன் அங்கீகாரத்திற்காக பிரயத்தனப்படுகையில், பில்ஜியும் உல்ஜியும் தங்கள் அடையாளங்களை காக்க போராடுகின்றனர். சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் பலமும் அதிகாரமும் கொண்ட  ஒரு பிரிவின் வேட்கைக்கும் பேராசைக்குமான விலை இன்னொரு தரப்பினரிடமிருந்தே பெறப்படுகிறது. கம்யூன் வியாபாரிகள் தோலுக்காக மான்களை திருடுவதற்கான விலையாக மேய்ப்பர்கள் குதிரைகளையும், அதிகாரி பாவோ சுங்காயின் லட்சிய வேட்கைக்கான விலையை ஓலோன்புலாக் ஓநாய்களும் விலங்குகளும், ஜென் சென்னின் பிரயாசைக்கான விலையை ஓநாய்க்குட்டியும், சீன அரசின் விவசாய குடியேற்றத்தின் நிலத் தேவைக்கான விலையை உள்மங்கோலிய புல்வெளியுமே கொடுக்க வேண்டி உள்ளது. ஆனால் எதன் பொருட்டும் தங்கள் சுதந்திரத்தையும் உரிமையையும் விலையாக கொடுக்க ஓநாய்கள் விழைந்ததில்லை. “ஒரு மனிதன் அல்லது இனம் சரண்டைவதற்கு முன்பாக மரணத்தை தேர்வு செய்யும் ஆன்மபலத்தைக் கொண்டிருக்காவிட்டால், அடிமையாவது தான் தவிர்க்க முடியாத விளைவாக இருக்கும்”. இந்த கூற்றின் இரு முகங்களாகவே மேய்ப்பர்களின் வாழ்வும் ஓநாய்களின் வாழ்வும் வெளிப்படுகின்றன. சண்டையின் போது மனிதர்களுக்கும் மரணத்திற்கும் இடையில் சிக்குண்ட போதும் ஓநாய்கள் வெளிப்படுத்தும் தீரம் ஒரு புறம், சீனப் பேரரசிற்கும் உரிமைக்கும் இடையில், அடையாளங்களைத் இழந்த வாழ்வைத் தேர்வு செய்யும் மேய்ப்பர்களின் சமரசம் ஒரு புறம் என ஆன்பலத்தின் இருவேறு பரிணாமங்கள் வெளிப்படுகின்றன. அதன் நீட்சியாகவே இறுதியில், குட்டி ஓநாய் தன் ஓநாய் அடையாளங்களை கண்டுணர்ந்தது முதல் இறுதி வரை தன் சுதந்திரத்தின் பொருட்டு நடத்தும் போராட்டம் இருக்கிறது.

நிலத்திற்கும் வாழ்வியலுக்குமான பிணைப்பு நுட்பமான இழைகளால் ஆனது. நில அமைப்பில் ஏற்படும் மாற்றம் அன்றாடங்களின் வழி மக்களின் கலாச்சாரத்தையும் வாழ்வியலையும் மாற்றத்திற்கு உட்படுத்துகிறது. ஒரு நிலப்பரப்பின் வாழ்க்கை முறையின் மையப்புள்ளியாக அமைந்து விட்டிருக்கும் அடையாளத்தை அழிப்பதன் மூலம், அந்த நிலப்பரப்பின் வாழ்க்கைப் போக்கே மாற்றப்படுகிறது. இயற்கையின் நற்கருணைவழி அமையப் பெற்ற பரந்துபட்ட மேய்ச்சல் நிலத்தின் இறுதிகட்ட நிலையும், அதையொட்டி அடுத்த தலைமுறை நாடோடி இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள நவீன  வாழ்க்கை குறித்தான எதிர்பார்ப்புகளும், அவர்களுக்கும் மேய்ச்சல் நிலத்தில் குடியேற்றம் செய்யப்பட்ட சீன விவசாயிகளுக்குமான கலாச்சார பேதங்களின் இடைவெளியை குறைத்து விட்டிருக்கிறது. காலப்போக்கில் இவர்களும் விவசாயிகளாகி சமகால பெரும்பான்மை நீரோட்டத்தில் கலந்து விடுவர் என்பதற்கு பெரிய ஆருடம் தேவையில்லை. இந்த வகையில் ஆவணப்படுத்தப்படாத வரலாற்றை கொண்ட ஒரு சமூகத்தின் மீது நிகழ்த்தப்படும் ஆக்கிரமிப்பும், அதன் வழி திணிக்கப்படும் கலாச்சார மாற்றமும் வரலாற்றில் இருந்தே அந்த சமூகங்களை துடைத்தெறிந்து விட்டு விடுகிறது. ஜென்சென் வழி உலகின் வரலாற்றை அறிந்து கொண்ட முதியவர் பில்ஜி வரலாற்றின் முக்கியத்துவத்தையும் கல்வியின் அவசியத்தையும் உணர்ந்து தங்களுக்கும் வரலாறு வேண்டும் என விரும்பினார். எனினும் காலம் எவரையும் போல மேய்ச்சல் நிலவாசிகளுக்காகவும் பொறுமை காட்டவில்லை. இறுதியில் பில்ஜியின் ஆசை ஆகிய வீழ்ந்துபட்ட மேய்ச்சல் நிலத்தின் வரலாறு எழுதப்பட்டிருந்தது. ஆனால் எடுத்துக்கடத்த எவ்வளவு உண்மையான ஓலோன்புலோக் மேய்ச்சல் நிலவாசிகள் எஞ்சி இருந்தனர் என்பது கவலைக்குரிய கேள்வி.

மறுபுறம் மேய்ச்சல்நிலம் அளவிற்கு மேய்ச்சல்நில வாழ்க்கை உன்னதமானதா என்பதை, அந்நிலத்தின் அடிப்படை கல்வி, மருத்துவ, சாலை வசதிகளின் நிலையை  கருத்தில் கொண்டு மதிப்பீடு செய்தல் நியாயமானது. எனினும் அந்த அளவிற்கான மாறுதல்களுக்கு அந்த சமூகம் தயாராகவே இருந்தது. ஆனால் இன்று வரையிலும் இயற்கைக்கும் வாழ்க்கைக்கும் இடையில் சமன்படுத்தப்பட்ட முறையையும் நிலையையும் நிறுவுவதில் மனித சமூகம் தோல்வியடைந்தே வருகிறது. விளைவு இன்றைய உள் மங்கோலியாவில் விவசாயக் குடிகளான ஹேன் சீனர்களே பெரும்பான்மையினராக வசிக்கின்றனர். 
பூகோள, அரசியல் சித்தாந்த எல்லைகளை கடந்து காலந்தோறும் இருந்தும் மறைந்தும் வரும் ஓலோன்புலோக்குகளும், முகம் மறந்த சமூகங்களுக்குமானது பொதுச் சின்னம் ஓநாய் குலச்சின்னம்

Comments