நான் உங்கள் உத்வேகக் கிளர்ச்சி வானில் நட்சத்திரமாக அன்றி சராசரி மனிதனாக இருக்கவே விரும்புகிறேன்
மாற்றுத்திறன் அற்றவர்கள் தங்கள் பச்சாபதாபத்தின் மூலமாகவும், அசாரணமான ஊக்கசக்தியாக பிம்பப்படுத்துவதன் மூலமாகவும் மாற்றுத்திறளாளிகளை அளவுக்கு மீறிய நிர்பந்தத்திற்குஉள்ளாக்குகின்றனர்.
~ஷ்ரிஷ்டி பாண்டே
ஒரு குளிர்காலத்தின் அதிகாலை 4:16. திடீரென கொடுக்கப்பட்ட 8 கல்லூரி பாடத்தில் மீதம் உள்ள 2 பாடம் ஒரு புறம், குளிர்காலத்தின் எதிர்வினையாக இயல்பாகவே உடலின் செயல்படாத பகுதிகளில் ஏற்படுகின்ற தசை இறுக்கம் மறு புறம். வலியிலும் சோர்விலும் உழல்வதாக கூறுவது கூட நிச்சயம் குறை மதிப்பீடே. எதுவாகினும் நான் தொடர்ந்து செயல்பட்டே ஆக வேண்டும். ஏனெனில் என் எந்தவொரு செயலிலும் நான் சமரசம் செய்வதென்பதோ ஓய்வெடுப்பது என்பதோ, என் மீது திணிக்கப்பட்ட “அசாதாரணமான மாற்றுத்திறனாளர்” என்ற எதிர்பார்ப்பில் ஏமாற்றம் ஏற்படுவத்துவதோடு, என் இயலாமையை மீறத் தேவையான முயற்சியில் போதாமை என என் பேராசிரியர்கள் கருத வாய்ப்பளித்து விடும். ஆகையால் என் சிந்தனையின் எல்லை வரையிலும், கைவிரலில் வெளிப்பட எஞ்சி இருக்கும் கடைசி எழுத்து வரையிலும் எழுதி விடவதென இருக்கிறேன். இத்தகைய கடின உழைப்பைக் கோரும் “அசாதாரண திறனாளர்” என்ற பிம்பத்தின் மீது எனக்கு எந்த பற்றும் இல்லை என்றாலும், இதை வெளிப்படுத்தவில்லை எனில் நான் சோம்பேறியாகவோ புத்தசாலித்தனமற்றவளாகவோ கருதப்படுவதோடல்லாமல் பயனற்றவளாகவும் கருதப்படக் கூடும். இதுவரையிலான வாழ்க்கையை இத்தகைய விமர்சனங்கள் மற்றும் அதன் சாத்தியங்களின் ஊடாகவே கடந்துவந்துள்ளேன்.
சராசரி மனிதனாகவும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பாளராகவும் கருதப்படுவதற்கான தொடர் போராட்டம்
பிறர் தயவு தேவைப்படுகின்ற காரணத்தினாலேயே, வெளிப்படுத்தாமலேயே எனக்கு நானே செய்து கொண்ட எவ்வளவோ சமரங்களைப் போலவே, பணிநேர வரையறையில் தேவைப்பட்ட தளர்வையும் (flexible working hour) வெளிப்படுத்தாமலே விட்டு விட்டேன். என்னால் சராசரி நபரைப் போல் பங்களிக்க இயலாது எனக் கருதப்படக்கூடிய பயத்திலும் குற்றவுணர்விலும் இருந்து விடுபட இத்தகைய முயற்சிகள் தேவையாயிருந்தன. பெருநிறுவனக் கட்டமைப்பில் ஒருவருக்கான மதிப்பு அவரது பங்களிப்பின் அளவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. நடைமுறையில் என் பங்களிப்பு இயல்பாகவே சராசரி நபரை விட குறைவாக இருக்கும் என்ற வகையில் இந்த போட்டிக் களம் எனக்கு சமமானதாக இல்லை. மறுபுறம் சௌகரியத்திற்கும் சலுகைகளுக்குமான கோரிக்கைகையை முன்வைப்பது பொதுவான போட்டிக்களத்தில் இருந்து என்னை விலக்கி தனிமைப்படுத்தி விடக்கூடும் என்ற பயம் உண்டு. இதன் காரணமாக நான் எப்பொழுதும் சமரசமின்றி என் உச்சபட்ச திறனை வெளிப்படுத்த வேண்டி இருந்தது.
எல்லோருக்கும் கூடுதல் வசதிகள் தேவைப்படுவதில்லை என்பதால், தவிர்க்க முடியாத சந்தர்பங்களில் அதை முன்வைக்கும் போது, நான் தனிமைப்படுத்தப்பட்டேன். எடுத்துக்காட்டாக தேர்வு சமயங்களில் தேவைப்பட்ட கூடுதல் அவகாசத்தின் பொருட்டு தனியாக தேர்வெழுத வேண்டி இருந்தது. இதை தவிர்க்க, என் தேவைகளை மறைக்கப் பழகியும், என் செயல்திறனின் எல்லைகளை தொடர்ச்சியாக விஸ்தரித்துக் கொண்டும் இயல்பான பங்களிப்பை உறுதி செய்து, என்னை சராசரி நபராக நிறுவ முயன்றேன். இதன் எதிர்பாராத விளைவாக நான் ஒரு உந்துசக்தியாக, உத்வேகத்தின் அடையாளமாக கருதப்பட்டேன். ஏனெனில் ஒரு மாற்றுத்திறனாளி ஒன்று ஜீரோவாகவோ அல்லது ஹீரோவாகவோ தான் கருதப்படுகிறார். இந்த அபத்தத்திலிருந்து என்னாலும் தப்ப முடியவில்லை.
இதையெல்லாம் விட அபாயகரமான ஒரு நிலை என்னவென்றால் மாற்றுத் திறனாளிகளை கடவுளின் குழந்தைகளாக, ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக கருதுவது. மாற்றுத் திறனை தெய்வீக இயல்பாக அடையாளப்படுத்துவதன் அபத்த விளைவுகளை சமூகம் உணராமல் இருப்பது அச்சமூட்டுகிறது. இத்தகைய புனித அடையாளங்கள் மூலம் எங்கள் குறைகளை இந்த சமூகம் புறந்தள்ளுவதோடு அல்லாமல், அதன் பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறதென்பதை வெகுசிலரே உணர்ந்திருக்கின்றனர். எங்களை தெய்வீக அடையாளமாக கருதுவது நாங்கள் உங்கள் உலகைச் சாராதவர்கள் எனக் கருதும் விலக்கிவைப்பு மனநிலை ஆகும். ஏனெனில் எங்களை மாற்றுத் திறனாளிகளாகவே ஏற்கும் பொழுது எங்கள் தேவைகளுக்கும் வசதிகளுக்குமான பொறுப்பு உங்கள் மீது விழுகிறது. அந்த பொறுப்பில் இருந்தும் கடமையில் இருந்தும் விடுபடவும், எங்களை நாங்களே காத்துக் கொள்ளவும் வேண்டி ஒரு தெய்வீகச் சிறகுகளை எங்களுக்கு பொறுத்தி விடுகிறது சமூகம்.
மாற்றுத்திறனாளிகளின் உண்மையான தடை இயலாமை அல்ல குறையற்றவர்களுக்கான உலகம்
மாற்றுத்திறனாளியாகவும் சராசரி மனிதனாகவும் ஒரு சேர ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதன் பொருட்டு, எங்கள் குறைபாடுகளை ஈடுசெய்ய ஒவ்வொரு செயலிலும் மேம்பட்ட திறனை வெளிப்படுத்த வேண்டியுள்ளது; அதுவும் பரிதாபப் பார்வைகளை ஆச்சர்யப் பார்வைகளாக மாற்றும் அளவில் வெளிப்படுத்துதல் சிறப்பு. பொழுதுபோக்காக செய்யும் வேலைகள் கூட விதிவிலக்கல்ல. எப்பொழுதும் உள்ளூர உறைந்து விட்ட ஒரு போதாமை, எப்பொழுதும் அதிகப்படியான முயற்சியையும் வேலைகளையும் செய்ய தூண்டியபடியே உள்ளது. இதனால் உடற்செயற்திறனுக்கென உள்ள எல்லைகள் இயல்பாகவே அதிகப்படியான சோர்வைத் தருகின்றன. முதுகு வலியில்லாமல் தொடர்ச்சியாக ஏழு மணி நேரத்திற்கு மேல் உட்கார்ந்திருக்க முடியாதென்ற நிலையிலும் பல நாட்கள் பத்து மணி நேரதரதிற்கும் மேலாக உட்கார்ந்திருக்கும்படி நேர்ந்திருக்கிறது. குறைகள் முன்னிலைப்படுத்தப்பட்டு விடும் அச்சத்தின் காரணமாகவே எந்தவொரு கூடுதல் அவகாசமும் கோராமல் குறிப்பிட்ட சமயத்தில், கூடுதல் சிரத்தை எடுத்தேனும், கொடுக்கப்பட்ட வேலைகளை முடித்து விடுகிறேன்.
அடுத்ததாக குறிப்பிடும்படியான விசயம் உத்வேகக் கிளர்ச்சி (inspiration porn)- ஸ்டெல்லா யங் எனும் மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்பாட்டாளர் உருவாக்கிய சொல்லாடல். உடற் கிளர்ச்சிக்கும், (மாற்றுத்திறனாளிகளை மையமாக கொண்ட) உத்வேக கிளர்ச்சிக்கும் புறவயமான (objectification) கூறு உள்ளது என்பது யங்க்கின் வாதம். அதில் உள்ள உண்மையின் காரணமாகவே நான் என்னை உத்வேகத்தின் அடையாளமாக அறியப்பட முன்வரவில்லை. சராசரி உடலமைப்பு கொண்ட சமூகம் சக்கர நாற்காலியில் இருப்பதாலேயே எங்களை ஒரு பீடத்தில் ஏற்றி ஊக்கசக்தியாக அடையாளப்படுத்துவதுடன், தாங்கள் குறைகளின்றி வாழ்வதற்காக உள்ளூர ஆறுதலும் ஆசுவாசமும் அடைகிறது. விட்டு விடுங்கள், நான் அசாதாரணமானவளாக இருக்க விரும்பவில்லை. நான் குறைகளையும் மீறி செயல்படும் ஊக்கசக்தியாக இருந்தாலும் சரி, குறைகளின் காரணமாக இயலாமையுடன் இருந்தாலும் சரி, இந்த சமூகம் என் இருப்பை என் உடலமைப்பின் வாயிலாகவே அடையாளப்படுத்துகிறது. மாற்றுத்திறனாளிகள் என்றாலே சராசரி அன்றாட வாழ்க்கை வாழ இயலாதோர் என்ற பார்வை இயல்பாகவே புரையோடி விட்டதன் விளைவே இது. அதனாலேயே பெரும்பாலான மக்கள் செய்கிற சாதாரண வேலையை கூட நாங்கள் செய்தால், அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்து உத்வேகம் பெறுகிறது. மாற்றுத்திறன் என்பது நாங்கள் வெல்ல வேண்டிய தடை அல்ல. இயலாமையுடன் ஏன் நாங்கள் சாதாரணமாகவும் அமைதியாகவும் வாழக்கூடாது? ஏன் எங்கள் குறைகள் எப்பொழுதும் ஒரு தடையாகவோ இயலாமையாகவோ பார்க்ப்படுகிறது? உண்மையாக மீறப்பட வேண்டிய தடை என்பது இயலும் சமூகத்தால் எங்கள் மீது திணிக்கப்பட்ட இயலாமை எனும் கண்ணோட்டமே.
கருணை எனும் ஆயுதம் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக் குறித்த பொது சமூகத்தின் சிந்தனை
மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்கின் போது செய்தித்தாள்களில் disability எனும் சொல்லின் ‘dis’ எழுத்துகள் பதக்கங்களால் மறைக்கப்பட்ட ஒரு சித்திரம் பரவலாக பகிரப்பட்டது. தன் கால்களால் சித்திரம்தீட்டும் ஒரு மாற்றுத்திறன் கலைஞனின் புகைப்படம் வெவ்வேறு சமூக ஊடகங்கள் வாயிலாகவும் எனக்கு பகிரப்பட்டது. இந்த படங்கள் இயலாமையை மீறிய சாதனையாளர்களின் கதைகளாக பகிரப்பட்டு, அவர்கள் வாழ்க்கையின் மூலம் உத்வேகம் கொள்ள கோருகிறது. சக்கர நாற்காலியில் உள்ள பெண் தன் நிழலில் கேளிக்கை நடன நிலையில் நிற்கும் சராசரி பெண்ணாக உருவகம் செய்வது போன்று மற்றொரு சித்திரம் உள்ளது. என் பால்ய காலத்தில் இந்த சித்திரம் பலராலும் அனுப்பப்பட்டு, சில காலம் என் வாட்சப் முகப்புப்படமாகவும் வைத்திருந்தேன். ஒரு சராசரி மனதின் மாற்றுத்திறன் குறித்த பார்வையின்/புரிதலின் விளைவாக உருவான இந்த புகைப்படத்தை தீவிரமாக உள்வாங்கியதன் காரணமாக, மகிழ்ச்சியாக வாழ வேண்டும் எனில் நான் ஒரு மாற்றுத்திறனாளி என்ற நிதர்சனத்தை மறுதலிக்க வேண்டும் என நம்பினேன்.
மாற்றுத்திறன் என்பது ஒரு பெருந்துயராக கருதி மாற்றுத் திறனாளி சராசரி வேலைகளை செய்வதாலேயே கொண்டாடப்பட வேண்டும் என்ற நிலைப்பாடும்; மகிழ்ச்சியாக வாழ தங்கள் குறைகள் குறித்த நிதர்சனங்களை மறுதலிக்க வேண்டும் என்ற சிந்தனையும் பல்வேறு படங்கள் வாயிலாகவும், சிந்தனைகளாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டு பொதுபுத்தியில் நிறுவப்படுகிறது. தங்களை எந்த சமரசங்களுமின்றி மாற்றுத்திறனாளியாக ஏற்றுக் கொள்பவர்கள், பலவீனமானவர்களாகவும் குறைபாடுகள் கொண்டவர்களாகவும் கருதப்படுவார்கள். இத்தகைய பொதுச் சிந்தனைகள் சராசரி மனிதர்கள் எங்களை புறவயமாக மதிப்பீடு செய்து, தங்களை மேம்பட்டவர்களாக உணரவும் நம்பவும் அனுமதியும் அங்கீகாரமும் தருகிறது. மாற்றுத்திறன் என்பது மோசமான இயலாமை என்ற பொதுக்கருத்தின் ஆதிக்கத்துடன் தான் நாம் வளர்க்கப்படுகிறோம். இன்று வரையிலும் என்னைச் சார்ந்தோர்களுக்கு நான் பயனற்றவளாகவும் சுமையாகவும் உணர்வதில் இருந்து விடுபட தொடர்ந்து உள்ளூர போராடுகிறேன். என்னளவிலேயே நான் தகுதியானவள் தானா என்ற சந்தேகத்துடன் என்னால் எப்படி நம்பிக்கையுடன் பொதுவெளியை எதிர்கொள்ள முடியும்?
குறைகளற்ற சராசரி மனிதர்களுக்கு நான் கூறுவது- என் மதிப்பை தொடர்ச்சியாக நிரூபித்துக் கொண்டேஇருக்கும்படி நீங்கள் நிர்பந்தப்படுத்துகிறீர்கள். நீங்கள் உங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லாதபோது, நான் மட்டும் ஏன் செய்ய வேண்டும்? தெரியவில்லை. இதை நான் உதாசீனப்படுத்தி விட்டு, உங்கள் அங்கீகாரத்தை வேண்டுவதை நிறுத்தி விடலாமா? முடியவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமெனில் சராசரி வாழ்க்கை குறித்தான பொது சிந்தனை/புரிதல் என்னைச் சுற்றி எங்கெங்கும் பரந்து விரிந்துள்ளது; அந்த சிந்தனைப் பிண்ணலில் இருந்து எப்படி வெளியேறுவது என எனக்குத் தெரியவில்லை
Comments
Post a Comment