அகவாழ்வின் மீதான சமூக வெளிச்சம்
இதை வெளிப்படுத்துவது சற்று வலி மிகுந்தது- மனத்தின்மையை உள்ளிருந்து சீர்குலைக்கும் நாள்பட்ட நரம்பு பாதிப்பின் வலியை விடவுமே. அடுத்தடுத்த சூரிய உதயங்களுக்கிடையிலான எந்தவொரு கனத்தையும் பிறரது துணையின்றி கடந்திட இயலாத மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை தனி நபர் வாழ்க்கையாக இல்லாமல் ஒரு பெரிய குழு செயல்பாடாகவே இருக்கிறது- குடும்பம், நண்பர்கள், தனி உதவியாளர்/பாதுகாவலர், மருத்துவ பணியாளர் என.
எனக்கு உதவி செய்பவர்கள், ஊதியம் பெறுகிறவர்களா இல்லையா என்பதை தாண்டி, என் உடலாக இருந்து என் வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதே பெரு வரம். தன் வாழ்வின் காலத்தில், என் வாழ்க்கை வாழ்ந்து, என் நாட்கள் முன்னோக்கி நகர்வதை சாத்தியப்படுத்துபவர்களை பாராட்டியும் நன்றி தெரிவித்தும் இதை தொடங்குவதே உசிதம்.
சராசரி மனித மனங்கள் அறிந்திடாத உள்ளார்ந்த பக்கங்களை கொண்டது மாற்றுத்திறனாளர் வாழ்க்கை. என் வாழ்க்கை என்னுடையதாக இருக்கும் அதே அளவில் என் வாழ்க்கை என்னுடையதாக இருக்கவில்லை. அனைத்து சமயங்களிலும் என்னால் நினைத்த வேலையை நினைத்த மாதிரி செய்ய முடிவதில்லை.
என் சிந்தனைக்கான எல்லை என் உதவியாளர்களை அனுசரித்தே உள்ளதன்றி பூரண சுதந்திரமானதாக இல்லை. அவர்களது நலனில் அக்கறையுடன் தனிப்பட்ட வகையிலும், சமூக, பொருளாதார அளவிலும் அ
வர்களது பாதுகாப்பை உறுதி செய்வது அத்தியாவசியமானது. ஏனெனில் என் நாட்களை உயிரோட்டமாக வைத்திருப்பது அவர்கள் பொறுப்பாக இருக்கிறது. நம் வாழ்க்கை நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பது சமயங்களில் உணர்வுரீதியாக சிதைப்பதாக உள்ளது.
எப்படி? நான் சார்ந்த உலகில் இருப்பவர்களின் பலதரப்பட்ட உணர்வுகளை சரிவரக் கையாளவும், அவர்களது நலனையும் மகிழ்ச்சியையும் உறுதிசெய்யவும் தவறும்பட்சத்தில், அவர்கள் என்னை கவனிக்க முடியாமலோ விரும்பாமலோ போக கூடும். பலரும் சமயங்களில் என் நம்பிக்கையையும் உறுதியையும் விழுங்கிவிடுகின்றனர். என் குறைகளை மறைப்பதோ நியாயப்படுத்துவதோ அல்ல என் நோக்கம். மாறாக சிடுமூஞ்சியாக மாறிவிட்ட ஒருவன் மீது பிறரால் எப்படி அக்கறை செலுத்த முடியும் என்பதே பயமும் சந்தேகமும்.
நான் இரவில் எதேனும் உண்ண விரும்பினால் பிறரிடம் கேட்க வேண்டும். என்னால் நினைத்த மாத்திரத்தில் நினைப்பது போல் செயல்பட முடியாது. தொடர்ச்சியாக இவ்வாறு கேட்பது பிறருக்கு சலிப்பூட்டக் கூடும். அதனால் சமயோசிதமாக சிந்தித்தே எதையும் கேட்டிட வேண்டி இருக்கிறது.
சமயங்களில் என்னை நானே சூழ்நிலைக் கைதியாக உணர்கிறேன். என் தேவைகளைப் பற்றி சிந்திக்கும் முன் பிறரது நலனையும் மகிழ்ச்சியையும் பற்றி சிந்திக்கவும், உறுதிசெய்யவும் வேண்டி உள்ளதென்பது கடினமாகவும் தனிமையாகவும் உணர வைக்கிறது. சமயங்களில், உணர்வுரீதியாக கையாலாகாத்தனமாக உணர்கிறது. எதுவாகிலும் இந்த முடிவு என்னுடைய தேர்வு.
என் வாழ்க்கை பிறரது உணர்வுகளின் மையப்புள்ளியில் இருந்து இயங்குகிறது. என்னால் சராசரி மனிதனைப் போல் என் சிந்தனைகளுக்கு உயிர்கொடுக்க முடிவதில்லை என்பது சிக்கலானது. சமயங்களில் கடினமான நாட்களைத் தொடர்ந்து வரும் இரவுகள் நீண்டதாகவும் கண்ணீர் நிறைந்ததாகவும் இருக்கிறது. காரணம் கடினமான நாட்களில் இருந்து என்னைச் சுற்றி இருப்பவர்களை நான் மீட்டெடுக்க வேண்டி இருக்கிறது. ஏனெனில் அவர்களின் மூலமே என்னை நான் மீட்டெடுக்கவும் மீண்டும் தயார்படுத்திக் கொள்ளவும் வேண்டி உள்ளது. இந்த திரிசங்கு நிலை சலிப்பூட்டுகிறது.
இது தான் என் வாழ்க்கை என்பதில் எனக்கு பெரும்பாலும் புகார் ஏதுமில்லை. முன்னோக்கிய நம்பிக்கை மிகுந்த இந்த பயணத்தில் உணர்வுகளை சீர்குலைக்கும் தருணங்களைக்கு நான் தப்பவில்லை என்பதும் நிஜம். இந்த 12 வருட நீள பயண அனுபவம் சலிப்பான தருணங்களையும் கொண்டே இருக்கிறது. தன் சார்பு வாழ்க்கையிலும் பிறரது உணர்வுகளை தங்கள் வாழ்க்கையின் ஓட்டத்தில் இருந்து விலக்கியே வைத்திருக்கும் நண்பர்களை நான் அறிவேன்.
அத்தகைய முயற்சிகள் எனக்கு கைகொடுக்கவில்லை. என்னைச் சுற்றி இருப்பவர்களை நான் கவனிக்கத் தவறும்பட்சத்தில் அவர்கள் என்னை கவனிக்க விரும்பாமலோ, வேண்டாமலோ போகக்கூடும்.
என்னைச் சுற்றி இருப்பவர்கள் என் நேர்மறை சிந்தனைகளாலும், காரியசித்தி மனோபாவத்தாலும் உந்தப்படுதல் பெறுமதியானது. என் உணர்வுகளை பல அடுக்குகளாக பிரித்து வைத்திருப்பதன் மூலம் இதை சாத்தியப்படுத்துகிறேன். இது ஆரோக்கியமற்ற செயல்பாடு என்பதை விட, இந்த அபாயகரமான செயல்பாட்டின் மூலமாகவே என் வாழ்க்கை சமன்படுத்த வேண்டி இழுக்கிறது.
துணையும் உதவியும் இன்றி கைவிடப்பட்டு திடீரென நிகழ்ந்து விடக்கூடிய மரணமே என் பெரும் பயம். ஏனெனில் என் சிறுநீர்க்குழாயில் ஏற்படக் கூடிய ஒரு சிறு அடைப்பு, சிறுநீர்ப்பையை நிரப்பி, என் மூளை ரத்தநாளங்களை வெடிக்கச் செய்து, அரை மணி நேரத்தில் மரணம் சம்பவித்து விடக்கூடும்.
அதனாலேயே நான் ஒருவகையில் விரும்பியே என்னைச் மனதளவில் சூழ்நிலைக் கைதியாக்கிக் கொண்டேன். இத்தகைய வாழ்க்கை கடினமனா போதிலும், என்னைச் சுற்றி என் மீது ்அக்கறை கொண்ட, என்னை கவனித்துக் கொள்ள விரும்பக்கூடிய ஒரு சூழலை நிறுவ இத்தகைய சமரசங்கள் அவசியமாகிறது.
உங்களின் நான் வேண்டுவது ஒன்றே ஒன்று தான். அடுத்த முறை உங்களுக்கென ஒரு தேநீரை பெற்றுக் கொள்ள எழுந்திரிக்கும் போது, உங்களது சுதந்திரத்தையும் ஆற்றலையும் நினைவில் கொள்ளுங்கள். எவர் உதவியும் இன்றி செயல்படக் கூடிய உங்கள் உடலை சிரமேற்று போற்றுங்கள்.
~அலி இங்கர்சால் (https://www.facebook.com/ali.ingersoll)
தமிழில்~ கோடீஸ்வரன் கந்தசாமி
Comments
Post a Comment