மதகுரு. ~செல்மா லாகர்லாவ்

 One glance at a book and you hear 

the voice of another person, perhaps

someone dead for 1000 years. To 

read is to voyage through time.

~ Carl Sagan

---


இலக்கியங்களை எந்த விதமான கலை வடிவங்களுடனும் எந்த காலகட்டத்தில் ஒப்பிட்டாலும் மேம்பட்டவையாகவே தெரிகிறது. பிற படைப்பு வடிவங்களை விட கற்பனைக்கான எல்லைகள் விரிந்த இலக்கியத்தில், அந்த எல்லைகளை முழுமையாக தொட்டுவிடக் கூடியவை கவிதைகளாகவே இருந்து வருகின்றன. அரிதாக சில புதினங்கள் கவியின் உணர்வோடு, மொழியின் வளங்களை அகழ்ந்து கட்டமைக்கப்படுகின்றன. அத்தகைய படைப்புகள் நிலத்தின் எல்லைகள் தாண்டி, காலத்தின் படிமங்களில் தூர்ந்து போகாமல், காலந்தோறும் வாசிக்கப்பட்டு செவ்வியல் படைப்புகளாக நிலைபெற்று விடுகின்றன.  நூற்றி இருபது ஆண்டுகளுக்கு பிறகான மனிதனின் அக வாழ்க்கையில் இருந்தும் கூட, எவ்விதத்திலும் அந்நியப்படுத்தப்பட இயலாத "மதகுரு" அத்தகைய அமரத்தன்மை உடையவன். செல்மா லாகர்லாவ்வின் எழுத்துக்களின் மீதேறி அவன் மனங்களின் மரத்து போன உணர்வு பிரதேங்களில் வரும் பவனி, மனநிலை சமன்பாட்டில் ஒரு பேரதிர்வை ஏற்படுத்துகிறது. செல்மா லாகர்லாவ் தன் எழுத்துக்களில் வசப்படுத்திய நாட்டுப்புற ஸ்வீடனை மணங்களுடனும் மனங்களுடனும் தமிழ்ப்படுத்தியமைக்காக காலஞ்சென்ற க.நா.சு. அவர்களுக்கு பெரு நன்றிகள். 


மாயப்புனைவு வகைமையான எழுத்துக்களின் ஆதாரம் யதார்த்தத்தை தாண்டிய கற்பனையே என்பதால், அத்தகைய படைப்புக்கள் கோரும் துல்லியமும் மொழி வளமும் அபாரமானது. மனதின் சலனங்களையும், உணர்வுகளையும் தத்துவ விசாரங்களின் அடிப்படையில், விசாரணைக்கு ஆட்படுத்தாமல், மனித இயல்புகளின் குறை நிறைகளின் துணை கொண்டு விவரிக்க முனைகிறார். இதன் காரணமாக, வாசிப்பின் முடிவில் ஒவ்வொரு முக்கியமான தருணங்களும் ஆழமான கேள்விகளை முன்வைப்பதற்கு பதிலாக, யதார்த்தத்தின் சாயலாக, வலிமையான உணர்வுகளாக மனதில் எஞ்சுகிறது. முகத்திலறையும் யதார்தத்தை எழுத்தில் கொண்டு, மனதை கிளறும் உணர்வுகளை ஏற்படுத்தும் படைப்புகள் மிகுந்த இலக்கியத்தில், இத்தகைய மாற்று படைப்புகள் கடத்தும் அனுபவம் தனித்தன்மையானது. காலக்கிரமத்தின் ஒழுங்கை மீறி தொகுக்கப்பட்ட இந்த நாட்டுப்புற கதைகள், "ஓர் ஒழுங்குடன் கலைந்த சிதறல்கள்" ஆக இருப்பதில் உள்ள அழகியல் நேர்த்தியை கொண்டிருக்கிறது. உலகில் உள்ள அனைத்து உறவுகளின் ஆதாரமாக விளங்கும் அன்பையும், அனைத்து அனுபவங்களின் ஆதாரமாக உள்ள பிரிவையும் வெகு நுண்ணிய வேறுபாடுகளுடன் சொல்கின்றன கதைகள். அத்தகைய அன்பையும் பிரிவையும் வாழ்வில் இருந்து நீக்கி விட்டால், பெர்ஹார்ட் கூறுவதைப் போல நல்லது, கெட்டது, நியாயம், கௌரவம் அனைத்தும் வெறும் வார்த்தைகளாகவே எஞ்சுகின்றன. 


மனிதனின் வார்த்தைகளும் செயல்பாடுகளும் குணம்/இயல்பு எனும் இடத்தில் துவங்கி, மனநிலை/உணர்வுகளால் உருவம் பெறுகின்றன. இந்த இருவேறு நிலைகளுக்கு இடையில் உள்ள இடைவெளியை நுட்பமான வரையறைகளின் மூலம் பிரித்து காட்டும் நிகழ்வுகளை, உரையாடல்களின் மூலம் கட்டமைத்திருக்கிறார் செல்மா லாகர்லாவ். இதன் மூலம் மனிதர்களின் சுயபிரக்ஞையை/ தன்னுணர்வை மீட்டெடுக்க முயலுகிறார். மரியாளுக்கும் மனசாட்சிக்குமான இத்தகைய உரையாடல்களின் நீட்சியாக நம்மைப் பற்றி நமக்கே இருக்கும் புனிதமான உணர்வுகள் கேள்விக்கு உள்ளாகிறது. பிறரிடம் இருந்து நாம் கேட்க அஞ்சும் கேள்விகள் நமக்குள்ளேயே எழுகின்றது. நாம் மட்டுமே அறிந்த நம் ஆழ்மன வன்மங்களுள் எவ்வித அனுமதியுமின்றி மரியாள் நம் மனசாட்சியை கூட்டி செல்கிறாள். பலகீனமும் தனிமையும் வாழ்க்கையின் போலித்தனமான நடிப்பை உதறி உண்மை நிலையை காட்டும் போது அகங்காரமும் பிம்பமும் பேரோசையுடன் சரிகிறது; அந்த சரிவின் முடிவில் ஓர் சலனமற்ற அமைதி ஏற்படுகிறது. நாமறிந்த சுயம் என்பது திருப்தியின் பேரிலேயே கட்டமைக்கப்படுகின்றது. அதன் இன்னொரு முகத்தை காட்டும் விதமாக, பெரும் வேட்டைக்காரனான மேஜர் பக்ஸ் தன் விருப்பத்தின் பேரிலேயே கரடியை கொல்லும் சந்தர்ப்பத்தை விட்டு கொடுத்திருந்தாலும், தன்னுள் இருக்கும் வேட்டைக்காரனின் அலைக்கழிப்புக்கு ஆளாகி, பின் அந்த கரடி கொல்லப்படவில்லை என அறியும் போது பேருவகை கொள்கிறான். இத்தகைய சுய மீட்பின் விளைவாகத் தான் ஆதரவை இழந்த லென்னர்ட் கடவுளின் பிரயாணியாக ஆதரவற்றோரின் குரலாக மாறுகிறான். 


சராசரி மனிதர்களுக்கு புத்தியும் நியாய உணர்வும்  தற்பெருமையின் மீதான பெரும் சுமை. எவ்வளவு முறை சிதைவுக்கு உள்ளானாலும், அந்த உணர்வு நிலை கடந்த பின் மீண்டெழும் மனசாட்சியின் அமரத்தன்மையில் தான் மனிதம் வாழ்கிறது. மனிதம் வீழ்த்தப்படும் போது, பெருமரங்களின் வீழ்ச்சியில் நொறுங்கும் கூடுகளைப் போல், பொய்கள் கலைத்து போடப் படுகின்றன. அந்த வகையில் லென்னர்ட்டின் மரணத்தின் அதிர்வில் அவன் மனைவியுடைய பிடிவாதம், உல்லாச புருஷர்களின் கேளிக்கைகளுடைய முகமூடி, சிண்ட்ரமுடைய வீழ்ச்சி, கெஸ்டாவின் மனசாட்சி என பல விஷயங்களும் சேர்ந்தே சிதைகிறது. பிறருக்கு ஆறுதல் அளிப்பதன் மூலம் தன் குற்றவுணர்வினின்று தான் ஆறுதல் பெறுவதே என குடியானவர்களுக்கு ஆறுதல் அளிப்பதன் மூலம் கெஸ்டா உணர்த்திச் செல்கிறான்.


மதகுருவால் அதிகமும் பேசப்பட்ட மற்றொரு உணர்வு பிரிவு. அன்பின் வலிமையையும் ஆழத்தையும் உணர்த்த வாழ்க்கையில் பிரிவு விட முக்கியமான உணர்வு இருக்கவியலாது. இதன் பிரதிபலிப்பாகவே கெஸ்டாவின் பிரிவுகள், காதலுக்கான சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் அடையாளப்படுத்துகின்றன. பிரிவு அளிக்கும் இத்தகைய சுதந்திரத்தை வேண்டியே மேடம் உக்ளா தன் மகனின் மரணத்தை வேண்டி சாவுடன் உரையாடினாள் போலும்; கடமையுணர்வும் நன்றியுணர்வும் கூட சுதந்திரமான அன்பிற்கு இடையூறு தான் என்று உணர்ந்ததாலேயே, அதிலிருந்து எலிஸபெத்தை விடுவிக்கும் பொருட்டு பிரிவை வேண்டினான் கெஸ்டா பெர்லிங். தன்னிடமிருந்து உண்மையை தன்னால் மறைக்க இயலுவதில்லை- காரணம் அது உண்மை என நாம் அறிந்திருப்பதால். அதனாலேயே இரு முறை கெஸ்டாவை பிரிய நேர்ந்த போதும், எலிஸபெத் அவனை தேடி ஓட வேண்டி இருந்தது. அந்த பிரிவுகளின் விளைவாகவே அவன் மீதான காதலை உணர்ந்து கொள்கிறாள். இதற்கு நேர்மாறாக மிகப்பெரும் காதலுடன் காதலைப் பிரிந்தவள் மரியாள். மிகத் தீவிரமாக காதலித்த ஒருவனை எதன் பொருட்டும் இல்லாமல் பிரிந்த அந்த மனது எந்த சமாதானமும் இன்றி பரிதவிக்கிறது. சிலர் மேலும் தீவிரமாக காதலிப்பதற்காகவே பிரிகிறார்கள் போலும். 


அன்பிற்கும் விசுவாசத்திற்கும் இடையில் ஓர் இடைவெளி எப்போதும் உண்டு- அதுவே தர்க்க நியாயங்கள். இந்த தர்க்க நியாயங்களை அசைத்து பார்க்க சிறு சந்தேகங்களே போதுமானதாகிறது. அந்த சந்தேகங்கள் தோன்ற பகுதி உண்மையோ, விடை காணவியலாத கேள்விகளோ போதுமானதாகிறது. இதனை ஆதாரமாக கொண்டே உல்லாச புருஷர்களுக்கு ஏக்பி சீமாட்டி மீதான விசுவாவத்தை சிண்டரமால் எளிதாக சிதைக்க முடிகிறது. சேகரம் செய்யப்பட்ட மனித மனக் குரூரங்களே சிண்ட்ரம். சிண்ட்ரம் என்பவன் சாத்தானின் தனி மனிதப் பிரதிநிதி அல்ல; மாறாக சீமாட்டி மீது அவநம்பிக்கை கொண்ட உல்லாச புருஷர்கள், கணவனை ஒதுக்கி தள்ளும் பிடிவாதமான மனைவி, மகளை கைவிட்ட முரட்டு தந்தை, மன்னிக்க மனமில்லாத சீமாட்டி என அனைவரின் தொகுப்பே ஆவான். இவர்களுள் ஒளிந்திருந்த குரூரங்களின்றி சிண்ட்ரம் சிண்ட்ரமாக ஆகி இருக்க முடியாது.


கல்மிஷங்களற்ற மனதின் மேல் அனுபவங்களால் நிகழ்த்தப்படும் வன்முறை, மனதில் ஓர் இறுக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதிலிருந்து விடுபடும் வாழ்வின் திறப்புகள் மிகச் சாதாரணமான கணங்களிலேயே நிகழ்கிறது- மதகுருவின் மகளுக்கும் கெஸ்டாவிற்கும் மார்கரீட்டாவை சந்திக்கும் போது; ப்ரோபி மதகுருவைப் போது; ஜான் ஹேக்கிற்கு கெஸ்டாவை சந்திக்கும் போதும். மனதின் ஆழத்தில் இருக்கும் மனிதமோ, மனசாட்சியோ, எதுவாகிலும் அந்த கணங்களை மிக லாவகமாக அடையாளம் கண்டு, பற்றிக்கொண்டு, மேலெழுந்து விடுகிறது. 


சராசரிக்கும் குறைவான மனித தவறுகளை அதன் இயல்புகளிலேயே கூற முனைந்திருப்பதின் மூலமும், நிலத்தின் விவரணைகளின் மூலமும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஸ்காண்டிநேவிய நாட்டுப்புற வாழ்வை கச்சிதமாக கற்பனையில் புனர் நிர்மாணம் செய்யச் செய்கிறது இந்த படைப்பு. ப்ரோபி மதகுருவின் தோட்டத்தில் தனித்தனியாக அழகற்று இருக்கும் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து அழகுறுவது போல் வாழ்வின் நெடுகிலும் சிதறிக் கிடக்கும் துன்பங்களுக்கு இடையிலும், அந்த துன்பங்களின் சாயை படர்ந்த இன்பத்தை அடையாளம் காட்டிச் செல்கிறார் செல்மா. சூரிய உதயத்தின் பொன் கிரணங்களுக்கும், அஸ்தமனத்தின் சாம்பல் வண்ணத்திற்கும் இடையில், மரியாளுக்கு கேட்கும் தனிமை இருளின் ஓலங்களைக் கேட்டு, எலிஸபெத்தை உறைய செய்த குளிரில் தோய்ந்து, எங்கோ லாங்பென் ஏரியின் நீலத்தில் தொலைந்து விடுகிறது மனம். இன்னதென்று தனித்து குறிப்பிட எந்த உணர்வும் காரணமும் இன்றி, அனுபவங்களின் தொகுப்பில் பூரணத்துவம் அளிக்கிறான் மதகுரு.

Comments