வாசலைத் தேடி
“To acquire the habit of reading is to construct for yourself a refuge from almost all the miseries of life.” – W. Somerset Maugham
பொதுவாகவே மனிதர்களுக்கு தங்களை புத்திசாலிகளாக அறிதலிலும் அறியப்படுதலிலும் ஒரு வேட்கை உண்டு. காரணம் அறிவும் புத்திசாலித்தனமும் மனிதர்களை அவர்கள் பிண்ணனியை மீறி அடையாளப்படுத்த வல்லதாகிறது. அறிவுத் தள அடுக்குகளில் பெரும்பாலான படிகளாக புத்தகங்களும் எழுத்துக்களுமே காலந்தோறும் இருந்து வருகிறது. இந்த வகையில் புத்தகத்தை நாடுவோர் ஒரு புறம் இருக்க, வாழ்வின் சுழல்களில் சிக்கி, வாழ்வின் மீது ஒரு பற்றுதலைத் தேடி புத்தகங்களில் அடைக்கலமாவோர் எனும் மற்றொரு வகையினர் மறுபுறம். சோமர்செட் மௌகமும் ஜே.ஜே.போலாவும் கூறியதைப் போல் வாழ்வின் துயரங்களால் அலைக்கழிக்கப்படுபவர்களுக்கு, மனித வரலாறு நெடுகிலும் போராட்டம் நிறைந்த வாழ்க்கையை அடையாளம் காணவும், அதன் மூலம் சுய வாழ்வின் மீது பற்றுதல் கொள்ளவும் புத்தகங்கள் துணை செய்கின்றன.
பெரிதாக எந்த போராட்டமும் இன்றி, சராசரிக்கும் அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்ட என் 28 வருட வாழ்க்கை, ஒரு விபத்தால் எப்பொழுது முடிந்ததெனத் தெரியாத இரவிற்க்கும், எப்பொழுது விடிந்ததென புரியாத காலைக்கும் இடையில், என் எந்த சுய நினைவும் இன்றி முடிந்து விட்டிருந்தது. ஒரு மாற்றம் ஏற்பட்டு விட்டதென முழுமையாக உணர்வதற்குள் மார்கழியின் கடும் குளிர் மறைந்து பங்குனியின் கோடை தொடங்கி விட்டிருந்தது. காஃப்காவின் "உருமாற்ற"த்தில் உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையில் பூச்சியாக மாறிவிடும் நாயகனைப் போல், வலிந்து திணிக்கப்பட்ட இந்த மாற்றம், தற்காலிக நிலை என்பதை கடந்து நம் தினசரி நிலையாக மாறும் போது ஏற்படும் வாழ்வின் மீதான வெறுமையும் அவநம்பிக்கையும் மூர்க்கமானது. அது ஏற்படுத்தும் மனதின் ஓலங்களில் இருந்து தற்காத்து கொள்வதற்காக, திரைப்படங்கள் மற்றும் வெகுஜன இலக்கியங்களின் துணையுடன், வாழ்க்கைக்கும் உண்மைக்கும் இடையே எழுப்பப்பட்ட கற்பனைச் சுவர்களுக்கு மத்தியில் நிர்மாணித்துக் கொண்ட வாழ்க்கை சிரஞ்சீவியாக இல்லாமல் அற்ப ஆயுளில் முடிந்தது. இதன் பிண்ணனியில் அந்த படைப்புகளின் தீவிரமற்ற தன்மை இருந்தது. அத்தகைய தொடர்ந்த வெகுஜன வாசிப்பு ஒரு வாசகன் என்ற உணர்வைத் தாண்டி, வாசிப்பனுபவத்தை தந்ததே அன்றி ஒரு புது சிந்தனை வெளியை உருவாக்கவில்லை. அவை நேரத்தை கொன்று ஜீவித்திருக்க உதவியதே அன்றி சிந்தனையையும் கற்பனையையும் கிளர்த்துவதாக அமையவில்லை. இதன் காரணமாக அந்த மாயச்சுவர் மறைந்து நிஜத்தை உணர நேரும் போதெல்லாம், அந்த மனதின் ஓலமும் அது அளித்த பயமும் தொடர்ந்தது. மனமே மனதை கேள்வி கேட்கவோ, புரிந்து கொள்ளவோ திராணியற்று தன்னை தானே வென்று கொன்று தின்று கொண்டிருந்தது. கல்கியும் பாலகுமாரனும் சாண்டில்யனும் அமிஷ் திரிபாதியும் அஷ்வின் சங்கியும் ஒரேயடியாக வெளியேற்றப்பட்டு சலனமற்ற ஒரு இருள்வெளி உண்டானது.
உணர்வற்ற பிரக்ஞையற்ற அந்த வெளியை ஊடுருவி ஒளியுடன் வந்து கரம் பற்றியவர் சி.மோகன். தன்னுடைய "நடைவழி நினைவுக"ளின் வாயிலாக அழைத்து சென்று கு.பா.ரா., சுந்தர ராமசாமி, கோபிகிருஷ்ணன், பிரமீள் என எண்ணற்ற புது மனிதர்களை அறிமுகப்படுத்தினார். அந்த வரிசையில் முதலாவதாக நான் ஜெயகாந்தனுடன் கைகுலுக்க நேர்ந்ததற்கு அவரது நீண்ட கிருதாவோ அகண்ட சட்டக கண்ணாடியோ கூட காரணமாக இருக்கலாம். தொடர்ந்து ஜெயமோகன். ஜெயகாந்தனின் "ஒரு பிடி சோறு" அதை வாசிப்பவரின் வாழ்வு எத்தகைய வலி மிகுந்ததாக இருந்தாலும் ஆசீர்வதிக்கப்பட்டதாகவே உணரச் செய்யக் கூடிய தன்மையுடையது. ஜெயமோகனின் "கைதி" கடைசியில் காவலருடன் நிகழ்த்தும் உரையாடல் மனிதர்களை மனிதர்களாகவே வாழ்க்கையை வாழ்க்கையாகவே பார்க்கும் பார்வையை தருவதாக இருந்தது. இத்தகைய பாத்திரங்கள் மூலமாக நாம் கற்பனையில் கூட வாழ முடியாத, வாழ முடியாததாக நினைக்கிற ஒரு வாழ்வை இந்த உலகில் யாரோ ஒருவர் வாழ்ந்து கொண்டே தான் இருக்கிறார்- புகார் செய்யக்கூட அவகாரசமற்று, பிரக்ஞையற்று, திராணியற்று என்ற உண்மை முகத்தில் அறைந்தது. ஆம். நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
சி.மோகன் அறிமுகப்படுத்திய இத்தகைய மனிதர்களுடனான ஒவ்வொரு பரிச்சயமும் சந்திப்பும் விடைகளை எதிர்நோக்கி பல கேள்விகளையும் கேள்விகளைத் தேடி பல பதில்களையும் விட்டுச் சென்றது. மனதின் வெற்று வெளியில் தற்போது ஓலங்களுக்கு பதிலாக, தத்தமது ஜோடிகளை தேடியும்-வேண்டியும் கேள்விகளும் பதில்களும் நச்சரிக்கத் துவங்கின. அவைகளுக்கு ஒரு கதிமோட்சம் அளிக்க வேண்டிய கடமையுடனும் பொறுப்புடனும் மீண்டும் ஒரு களத்தை தேடி பயணம் தொடர்ந்தது. காரணம் அந்த கேள்வி பதில்களின் சங்கமத்தில் ஜனிக்கும் சிந்தனையை நான் இழந்தவனாவேன் என்ற குற்றவுணர்வு. சி.மோகன் விட்டு சென்ற பிரகாசமான வெளியானது அந்த படைப்புக்களின் பாத்திரங்களுடன் கற்பனையாக உரையாட ஏற்படுத்திக் கொடுத்த சந்தர்ப்பம் சிந்தனைக்கு உயிர் அளிப்பதாக இருந்தாலும் அதில் ஒரு பரிமாணத் தன்மை (uni dimensional view) அதிகமிருந்தது. காரணம் மனதால் உயிர் கொடுத்து உருவாக்கப்பட்ட பாத்திரம் மனதோடு உரையாடும் போது நம் அனுபவம் அந்த கற்பனையின் எல்லையாக மாறிவிடுகிறது. அந்த கற்பனைப் பாத்திரத்திற்கு கூட எஜமான விசுவாசமும் பவ்யமும் ஏற்பட்டுவிடுகிறது. இந்த நிலையில் ஒரு காத்திரமான உரையாடலை நிகழ்த்த வேறொரு அனுபவப் பிண்ணனியில் இந்த பாத்திரங்களை புரிந்து கொண்ட மனிதர்களுடனான அறிமுகம் தேவைப்படுகிறது. மீண்டும் ஒரு தேடல். ஒவ்வொரு தேடலும் காத்திருத்தலை வலியுறுத்தியது; கற்றுத் தந்தது.
நீண்ட தேடலுக்கும் காத்திருப்புக்கும் பிறகு, ஒரு நாள் திக்கற்ற பயணங்களில் எதிர்பாராத சமயங்களில் சரியான வழி காட்டும் ஒரு வழிப்போக்கர் போல, நண்பர் ஒருவரின் துணை கொண்டு அந்த வாசலை அடைந்தேன். பெரும் எதிர்பார்ப்புடன் திறக்கப்பட்ட வாசலின் மறுபுறத்தில் காத்திருந்தது அழையா விருந்தாளி நிலை. இந்த இடைப்பட்ட காலத்தில் பல கேள்விகளும் பதில்களும் தங்களுக்கு கிடைத்த ஜோடிகளுடன் திருப்திபட்டுக் கொண்டாலும் ஜனித்தது பெரும்பாலும் குறைபாடுகளுடன் கூடிய சிந்தனைகளே. நிர்கதி அடைந்துவிட்டன சில அற்பாயுள் விதிக்கப்பட்ட கேள்வி பதில்கள். அழையா விருந்தாளியாக இருப்பதிலான சௌகரியம் என்னவெனில் பிறரது தொந்தரவிற்கு உட்படாமல் இருப்பது என்பது புரிந்தது. இந்த அவகாசம் ஒரு சிந்தனைக் களத்தின் இயக்கத்தை எந்த சலனத்திற்கும் உட்படாது அவதானிக்கும் வாய்ப்பானது.
சமூகக் குழு செயல்பாடுகளானது பலதரப்பட்ட மக்களை அவர்களது தனித்தன்மையுடன் கூடிய செயல்பாடுகளின் மூலம் ஒரு பொது நோக்கத்திற்காக செயல்படுதல் ஆகும். இந்த வகையில் புதிதாக திறக்கப்பட்ட வாசலின் வந்தடைந்த இந்த சமூக களத்தில் சிந்தனையும் படைப்பாக்கமும் இணைப்பு புள்ளியாக முன்னிறுத்தப்பட்டு, வாசிப்பும் சமுதாய நிகழ்வுகள் சார்ந்த உரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டன. கற்றல் வழி தோன்றிய சிந்தனைகள் கடுமையான விமர்சனங்களின் மூலமும் கேள்விகள் மூலமும் சோதிக்கப்பட்டு செழுமைப்படுத்தப்பட்டன. விவாதங்களும் உரையாடல்களும் சிந்தனைகளுக்கு புதுப் பரிமாணங்களையும் முகங்களையும் அளித்தன. இலக்கற்ற முடிவிலா பயணத்தை போல, நிர்பந்தங்களற்ற இந்த உரையாடல்கள் வழிநெடுகிலும் ஆச்சர்யங்களும் கற்றல்களும் நிகழ்த்திக் கொண்டே இருந்தன. இத்தகைய படைப்பூக்கம் (creativity) மிக்க சமூகக் களம் அழையா விருந்தாளியாக இல்லாமல் நம்மை நிலை நிறுத்திக் கொள்ளவும், பொது நீரோட்டத்துடன் கலந்து செயல்படவும், சிந்தனை சார்ந்து அடையாளப்படுத்திக் கொள்ளவதற்குமான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த அடையாளமும் அங்கீகாரமுமே மனிதனை இயக்கும் விசையாக இருந்து அடுத்தடுத்த தளங்களுக்கு முன்னேற்றி செல்வதாக உணர நேர்ந்தது.
இதன் அடிப்படையில் மனித சமூக வளர்ச்சியை புரிந்து கொள்ள முயல்கையில், தனியாக காடுகளில் வாழ்ந்த மனிதன் சமூகக் குழுக்களாக வாழத் துவங்கியதன் விளைவாக நிகழத் துவங்கிய முதல் சமூக வளர்ச்சி, பின்னர் நிகழ்ந்த கற்றல்களின் பிண்ணனியில், சிந்தனைகளாக வளர்ந்து, உரையாடல்களின் வழியே எத்தகைய பாய்ச்சலை மேற்கொண்டு இன்றைய நிலையை அடைந்திருக்கக் கூடும் என்ற புரிதலை ஏற்படுத்தியது. இந்த வகையில், சமூக வளர்ச்சியின் முக்கிய படிநிலையாக நலிவடைந்த, ஒதுக்கப்பட்ட மக்களை உள்ளடக்கியதாகவும், அவர்களுக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தவும் கூடிய சமூகம் கட்டமைக்கப்பட வேண்டும்.
அதற்காக கற்றலும், அது சார்ந்த சமூகச் செயல்பாடுகளும் பரவலாக்கப்படுதல் வேண்டும். விரைவாக வளர தனியாக செயல்படுதல் வேண்டும், நீடித்து வளர குழுவாக செயல்படுதல் வேண்டும் (To move quicker, move alone. To move far, move together ~African proverb) என்ற கூற்றிற்கு ஏற்ப சிந்தனை மற்றும் உரையாடல் தளங்களில் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கான வாசல்கள் பரவலாக திறக்கப்படட்டும். திறக்கும் இந்த வாசல்கள் அனைவருக்குமானதாகவும் என்றென்றைக்குமானதாவும் ஆகட்டும்.
Good
ReplyDeleteThank you
Deleteவாழ்க்கையின் வலிமிகு நிகழ்வுகளையும் மனதின் வலிமைமிகு நினைவுகளையும் ஒரு சேர பதிவு செய்யும் எழுத்து!
ReplyDeleteசிறப்பு💐!
( காஃப்கா இல்லாமல் எப்படி😊?)
நன்றிங்க மேம்🙏
Delete